×

ஐ.டி. கம்பெனி மோசடியை சொல்லும் 'மாலுமி'!!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷின் ஸ்ரீ பிலிம் மீடியா என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம்  மாலுமி என்கிற படத்தினைத் தயாரித்து வருகிறது.

அறிமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சந்தோஷ், கதை, திரைக்கதை,வசனம் எழுதியிருப்பதுடன்  அறிமுக நாயகனாகவும் களமிறங்கியுள்ளார்.

இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் சுவாதி ஷண்முகம் இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தினைப் பற்றியும் அதன் தலைப்பைப் பற்றியும் சந்தோஷிடம் கேட்டபோது, “சென்னையைச் சேர்ந்த ஒரு கடற்கரை குப்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஐடி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சினைதான் மாலுமி படத்தின் கதை.

ஐடி கம்பெனியில் ஒரு பிராஜக்ட் செய்தபிறகு அதில் மிகப்பெரிய மோசடி நடக்கின்றது. அந்த மோசடிக்குக் காரணமான ஐடி கம்பெனி நிர்வாகியைப் பழிவாங்கித் தங்களுக்குக் கிடைக்கவேண்டியதைக் கிடைக்கச் செய்யும் “பிராஜெக்டை” அந்த கடற்கரைக்குப்பத்தைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

அந்த குப்பத்தில் இருக்கும் கதாநாயகன் அந்தப் “பிராஜெக்ட்”டுக்குத் தலைமையேற்று தனது நண்பர்களை ஒரு கேப்டனாக இருந்து வழி நடத்தி , ஐடி கம்பெனி நிர்வாகியை எப்படிப் பழிவாங்குகிறான் என்பதைச் சுவராஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறோம்..” என்றார்.
அகடம் என்கிற கின்னஸ் சாதனைப்படத்திற்கு இசையமைத்த பாஸ்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

சென்னையில் ஐடி கம்பெனி நிறைந்திருக்கும் பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளிலும் மற்றும் கடற்கரைக் குப்பங்கள் நிறைந்திருக்கும் கிழக்குக் கடற்கரைச்சாலையிலும் மாலுமி படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் உதவியாளர் கெளதம் முத்துச்சாமி இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.