அவர்களும் இவர்களும்' படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் ஐஸ்வர்யாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த படம் "ரம்மி'. தொடர்ந்து "பண்ணையாரும் பத்மினியும்' வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியான அவருடன் பேசியதிலிருந்து...
நீங்கள் நடிகையான கதையைச் சொல்லுங்கள்?
எனக்கு ஆந்திர மாநிலம்தான் பூர்வீகம். ஆனால் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். எத்திராஜ் கல்லூரியில் பி.காம்., படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே நாடகம், நடிப்பு என்று இருப்பேன். கண்டிப்பாக அப்போது நடிகையாவேன் என்று நினைத்ததில்லை. அதன்பிறகு விளம்பரப் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு "அவர்களும் இவர்களும்' படத்தில் நடிக்க அழைத்தார்கள். நடித்தேன். அதன்பிறகு "அட்ட கத்தி' படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்தேன். அதில் நடித்ததெல்லாம் யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. அந்தப் படத்துக்குப் பிறகு "ரம்மி'யில் நடித்தேன். இந்தப்படம் 2012 டிசம்பரில் ஆரம்பித்தது. 2013இல் "பண்ணையாரும் பத்மினியும்' ஆரம்பமானது. "ரம்மி' வெளியாக இப்போது நிறைய பேர் என் நடிப்பைப் பாராட்டுகிறார்கள். "பண்ணையாரும் பத்மினியும்' தொடர்ந்து வெளியாகியிருக்குறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
"ரம்மி', "பண்ணையாரும் பத்மினியும்' இரண்டு படத்திலும் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருப்பதால் அவருடன் இணைத்து கிசுகிசு பரவுகிறது. அவர் நடிக்கும் படங்களில் உங்களை ஜோடியாக்கச் சொல்லி சிபாரிசு செய்வதாகவும் தகவல். இதெல்லாம் உண்மையா?
இதில் ஒரு சதவிதம் கூட உண்மை கிடையாது. சினிமாவில் இதுபோன்று பேசுவது, எழுதுவது ஒரு கடமையாகவே செய்யப்படுகிறது. அதற்கு நடிகைகள்தான் பலிகடா ஆகிறார்கள். நானாவது இரண்டு படத்தில்தான் நடித்திருக்கிறேன். காயத்ரி மூன்று படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். நடிக்க வந்துவிட்டோம், இதையெல்லாம் கடந்துதான் போகவேண்டும். "ரம்மி' படத்தில் நான் நடிக்க வந்தபோது விஜய் சேதுபதிதான் நாயகன் என்பதுகூட எனக்குத் தெரியாது. அவர் சிபாரிசு செய்தார் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான கற்பனைதான்.
நீங்கள் "பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்காக தேர்வு செய்யப்பட்ட ஆறாவது கதாநாயகியாமே?
ஆமாம். அது ஒரு பெரிய கதை. முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒரு பிரபல நடிகையைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர் பெயர் வேண்டாம். படப்பிடிப்புக்கு நாளை காலை போகவேண்டும் என்ற நிலையில், அவர் "எனக்குத் தேதியில்லை' என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு இன்னும் நான்கு பேரைப் பார்த்திருக்கிறார்கள். திருப்தி இல்லாமல் போகவே, இயக்குநர் அருண் குமார் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார். கதைகூட கேட்கவில்லை. விஜய் சேதுபதியுடன் நடிக்கப் போகிறோம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன்.
நீங்கள் நன்றாக நடித்திருந்தாலும் "ரம்மி' படமென்னவோ சுமார் ரகம்தான், "பண்ணையாரும் பத்மினியும்' படத்துக்கு என்ன மாதிரியான பாராட்டுகள் கிடைத்துள்ளது?
"ரம்மி' எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அந்தப் படத்தில் சொர்ணம் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தேன். ஒரு கிராமத்துப் பெண் எப்படியிருப்பாளோ அதையெல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். அதற்காகத்தான் எனக்குப் பாராட்டும் கிடைத்தது. "பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் மலர்விழி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்தப் படத்தில் நடித்ததற்காக என்னையும் பிடித்திருகிறது. படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என்னை நிறைய பேர் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்கள். இந்தப் படம் என்னை ஒரு நல்ல நடிகையாக சினிமா உலகில் அறியவைத்துள்ளது. நீங்களும் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
தொடர்ந்து இரண்டு படத்திலும் தாவணி போட்ட கிராமத்து தேவதையாகவே நடித்திருக்கிறீர்களே, கவர்ச்சியாக நடிக்கும் எண்ணம் இல்லையா?
இன்றைய நவீன பெண்களைப்போல நடிப்பேன். ஆனால் அதற்காகக் கண்டிப்பாக கவர்ச்சியாக நடிக்கமாட்டேன். நடிகை என்றால் கவர்ச்சியாகத்தான் நடிக்கவேண்டும் என்று சட்டமில்லை. கவர்ச்சியாக நடித்தால்தான் சினிமாவில் இருக்க முடியும் என்றால் அப்படிப்பட்ட சினிமா எனக்கு வேண்டாம்.
எந்த மாதிரி நடிகைபோல வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
சிம்ரன், ஸ்ரீதேவி, கஜோல் மாதிரி வரவேண்டும் என்று ஆசை.
இவர்கள்கூட கவர்ச்சியாக நடித்துப் பெயரெடுத்தவர்கள் தானே?
தெரியும். ஆனால் இவர்கள் கவர்ச்சியாக நடித்துப் பெயர் வாங்கியதைவிட நன்றாக நடித்துதான் பெயர் பெற்றார்கள். இவர்களை மாதிரி கவர்ச்சியாக நடிக்காமல் பெயர் வாங்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
அடுத்து என்னென்ன படங்கள் நடிக்கிறீர்கள்?
"அட்ட கத்தி' தினேஷுடன் "திருடன் போலீஸ்'. இதில் நவநாகரீகப் பெண்ணாக நடித்துள்ளேன். அடுத்து தனுஷ், வெற்றி மாறன் இருவரும் இணைந்து தயாரிக்கும் "காக்கா முட்டை' படத்தில், குடிசைப் பகுதியில் வாழும் பெண்ணாக நடிக்கிறேன். இது எனக்குப் பெரிய இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பிக்கை இருக்கிறது.
நடிகைகளால் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க முடிவதில்லையே, ஒன்று இரண்டு படத்தோடு காணாமல் போய்விடுகிறார்களே?
குஷ்பு, ஜோதிகா, சிம்ரன், ரம்பா, மீனா, திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றவர்கள் தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் நம் ஊர் போன்ற, நமக்கு நெருக்கமான முகமாக அவர்களுடைய முகம் இருந்தது. அதுமட்டுமில்லை, அவர்கள் தாங்கள் நடிக்கும் பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்திருப்பார்கள். அதைவிட முக்கியமான விஷயம், சுமாரான படங்கள்கூட அப்போது இரண்டு, மூன்று வாரம் ஓடும் நிலை இருந்தது. அதனால் அவர்களுடைய முகம் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தது. இன்று அப்படியில்லை. ஒரு நாளைக்கு ஒரு நாயகி அறிமுகமாகிறார். எல்லோரையும் ரசிகர்களால் ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை. படங்கள் ஓடும் காலமும் குறைந்துவிட்டது. ஒரு நடிகையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால்தான் அவருடைய முகம் நினைவுக்கு வரும். இன்னொரு விஷயமும் இருக்கிறது. யாரும் நடிகை நடிப்பை நம்பி படமெடுப்பதில்லை. அதனால் ஒன்றும் பண்ணமுடியாது. இது சினிமா... அப்படித்தான் இருக்கும்.
பெரிய ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆசையில்லையா... உங்கள் கனவு ஹீரோ யார்?
ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய், கார்த்தி, தனுஷ், சிம்பு, ஆர்யா இன்னும் தமிழ் நாட்டில் எத்தனை பெரிய ஹீரோக்கள் இருக்கிறார்களே அவர்கள் அனைவருடனும் இணைந்து நடிக்கவேண்டும். அவர்கள் அத்தனை பேரும் என் கனவு ஹீரோதான் என்று எழுதிக்கொள்ளுங்கள். மாட்டுவேனா... எப்படி நம்முடைய பதில்?
உங்களுடைய கனவு ரோல் என்ன?
இந்தியில் வந்த "கஹாணி' என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார். அதுபோல ஒரு பாத்திரத்தில் நடிக்கவேண்டும். அது ஹீரோயினுக்காக ஓடிய படம். குறிப்பாக ஒரு பெண்ணுக்காக ஓடிய படம்.
