அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவர்களுக்கு தப்பான ருட் காட்டும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்!'' என்ற அனல் பறக்கும் வசனங்கலினால் ரசிகர்களின் முதுகெலும்புகளை நிமிர்த்திவிட்டிருக்கும் படம் தான் "நிமிர்ந்து நில்" சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் அவருடன் அமலா பால், சரத்குமார், தம்பிராமையா, சூரி மற்றும் பலர் நடித்திருகின்றனர்.
ஜெயம் ரவி ( அரவிந்த் சிவசாமி ), ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ஒருநாள் அவருடைய நண்பர் சூரி இல்லாமல் பைக்கில் செல்லும் ஜெயம் ரவியை, டிராபிக் போலீஸ் வழி மறிக்க தன்னிடம் தேவையான லைசன்ஸ்,ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும், போலீஸ்காரர் கேட்கும் லஞ்சத்தை கொடுக்காததால் கோர்ட்,கேஸ் என அலைகழிக்கப்படுகிறார்.
பின்பு டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் ஜெயம் ரவி, அதே சமையம் தன்னை லஞ்சம் தந்து காப்பாற்றும் ஆரூயிர் நண்பரான சூரியையும்,அவருக்கு அந்த ஐடியாவை தரும் தன்னை ஒரு தலையாக காதலிக்கும் அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே 'பகீர்' என்கிறது.
ஜெயம் ரவியால் பாதிக்க பட்ட அதிகார வர்க்கத்தினர் சட்டத்திற்கு புறம்பாக ஜெயம் ரவியை செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி,அமலாபால் மற்றும் வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர்
பின்னர் அதிலிருந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்த முறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி.
சூரி,வக்கீல் சுப்பு பஞ்சு, ஏட்டு தம்பி ராமைய்யா,உண்மை டிவி. அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் மூலம் ஆப்பு வைக்கிறார். பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ஒன்றும் இல்லாமல் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? 'நிமிர்ந்து நில்' படத்தின் மீதிக்கதை!
ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் . அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆந்திரா - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்!
''உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்...'' என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருந்தாலும் இது கதைக்காக என்று எடுத்து கொள்ளலாம் மற்ற படி அமலா பாலின் நடிப்பும் கதபத்திரத்துக்கு அமைவாக உள்ளது.
சூரியின் கலாச்சலான நடிப்பு படத்திற்கு பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, 'இன்ஸ்' இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் வெற்றி!