×

"குக்கூ" பட விமர்சனம்

ஆனந்த விகடனில் "வட்டியும் முதலும்" என்ற விறுவிறுப்பான தொடரின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை கவர்ந்த ராஜு முருகனின் முதல் படம் "குக்கூ". தெளிவான திரைக்கதை, அளவான வசனம், அழுத்தமான காட்சியமைப்பு போன்றவற்றின் மூலம் ஒரு திருப்தியான படத்தை கொடுத்திருக்கிறார் ராஜு முருகன்.  ராஜபார்வை, காதல் ஓவியம், போன்ற பார்வையற்றவர்களின்  காதல் காவியங்கள் பல வந்திருக்கின்றது. ஆனால் கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க பராத்திக்கும்  படியும் தன் முதல் படத்திலேயே உணர்வு பூர்வமான   பதிவை  செய்திருக்கும் இயக்குனர்   ராஜூ முருகனுக்கு வாழ்த்துக்கள்.
கதைப்படி, இசைகுழு   ஒன்றில் இளையராஜா பாடல்களை பாடியபடி எல்லோரையும் வசியபடுத்தும் பார்வையற்ற (தமிழ்) எனும் 'அட்டக்கத்தி' தினேஷ், இவர் ,மற்ற நேரங்களில் இரயிலில்   பார்வையற்ற தன்   நண்பர்களுடன்  சேர்ந்து சின்ன சின்ன பொம்மைகல் மற்றும் பொருட்களை,  விற்று வருகிறார் .  அதே  இரயிலில், பயணியாக வரும்   பார்வையற்ற சுதந்திரக்கொடி எனும் ( மாளவிகா) இருவருக்கும் சிறுசிறு மோதல்களுக்கு பின்னர் காதல் ஏற்படுகிறது .

தினேஷ்  தன்    காதலை  ஒரு சிடியில் பேசி நண்பர் உதவியுடன்  மாளவிக்கவிடம்   வெளிப்படுத்த போகும் நேரத்தில் , நாயகி  மாளவிகா  அவருக்கு பல விதத்திலும் உதவும் இளம் சமூக சேவகர் ஒருவர் மீது காதல் கொண்டிருக்கிறார் என்றும் கூடவே பார்வை உடைய ஒருவரையே  திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நாயகியின் லட்சியமும் தெரிய வருகிறது. அதனால், நாயகி மாளவிகா  பையில் வைத்த சி.டி.யை திரும்ப எடுக்கவும் முடியாமல்,  தன் சொல்லவும் முடியாமல்  திரும்புகிறார் தினேஷ் .

 இது ஒரு பக்கம் என்றால்
மாளவிகாவின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு மாளவிகாவை இன்னொருவனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அண்ணனின் சதியில் இருந்து மாளவிகா தப்பித்தாரா? தினேஷின் காதல் கைகுடியாதா ? என்பதற்கு வித்தியாசமும், விறுவிறுப்பாகவும், நெஞ்சை உலுக்கும் திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'குக்கூ' திரைப்படத்தின் மீதிக்கதை!

அட்டக்கத்தி தினேஷ் இயல்பான நடிப்பை தந்துள்ளார். இதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்திருப்பது அவரது நடிப்பில் தெரிகிறது. அவருக்கு இணையாக புதுமுக நாயகி  மாளவிகாவும் நடித்துள்ளார். இருவரின் காதல் காட்சிகள் மிகவும் நாகரீகமாகவும், கவிதைத்தனமாகவும் இருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு இந்த காதல் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேடை கலைக்குழுவில் எம்.ஜி.ஆர்., அஜீத், விஜய்யாக வலம் வரும் நட்சத்திரங்கள் சந்திரபாபுவாக 3 மனைவிகளின் கணவனாக கலக்கி, கலைகுழுவையும் நடத்தும் ஈஸ்வர், 'ஆடுகளம்' முருகதாஸ், இயக்குநர் ராஜூ முருகன் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

இரண்டாவது பாதி திரைக்கதையில் கொஞ்சம் தடுமாறுவது போல தெரிந்தாலும், க்ளைமாக்ஸில் நம்மையெல்லாம் அசத்திவிட்டார் இயக்குனர்.  நறுக்கான வசனங்கள்,   சந்தொஷ் நாராயணன் இசை யில்   பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை மிக அருமை. பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.  ஒரு சில இடங்களில் நீள அகலங்களை சற்றே குறைத்து இருந்தார் என்றால் 'குக்கூ' இன்னும் அழகாக கூவியிருக்கும்.

ஆனாலும், ''குக்கூ -  புதுமையை  விரும்பும்  ரசிகர்களுக்கு நல்ல கிக்கு...