×

புலிவால் – விமர்சனம் | புரியாத வால்!



ஒரு பரபரப்பான அம்சத்தை மையக் கதையாக கொண்டிருந்தாலும் அதை அதே பரபரப்பான திரைக்கதையோடுகாட்சிப்படுத்தாமல் பல சொதப்பல்களோடு வெளிவந்திருக்கிறது புலிவால். ‘சப்ப க்குரிஷு’ என்ற மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் தான் புலிவால்.
பஞ்சு மெத்தையில் படுத்துறங்கும் பணக்கார பையன் பிரசன்னா. மாத சம்பளத்திற்கு மல்லுகட்டும் ஏழ்மையான விமல். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் கதை தான் படம். பணம் இருப்பவர்களிடம் திமிர் இருக்கத்தானே செய்யும், பணம் இல்லாதவர்களிடம் தானே குணம் இருக்கும்! இந்தக் கருத்தை சொல்ல வந்து, சரியாக சொல்லமுடியாமல் சிக்கித் தவித்திருக்கிறார் இயக்குனர்.
பிரசன்னாவும் விமலும் எதிரெதிர் திசையில் வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பவர்கள். எந்தப் பெண்ணை எப்படி ‘பிக்கப்’ பண்ணலாம் என பப், பார்ட்டி என வசதியானவர்களின் வாழ்க்கையை வாழ்கிறார் பிரசன்னா. அழகான பெண்களை ரசிப்பது மட்டுமல்ல, அவர்களின் அங்கங்களை தன் ஆப்பிள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ரசிப்பார். அதே போலத்தான், தான் அதிகம் விரும்பும் ஓவியாவுடன் படுக்கையில் இருந்ததையும் பதிவு செய்கிறார்.
சென்னையின் முக்கிய சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கும் விமல், அங்கே வேலை செய்யும் அநன்யாவை காதலித்து வண்டியை ஓட்டுகிறார். கஸ்டமரிடம் நடக்கும் கலாட்டாக்கள், சூரியும் தம்பி ராமைய்யாவும் அடிக்கும் லூட்டிகள் என கலகலப்பான காட்சிகளோடு நகர்கிறது விமல் போர்ஷன்ஸ்.
இனியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தும், அதை மறைத்து பிரசன்னா தன்னுடன் உல்லாசமாக இருந்தது ஓவியாவுக்கு தெரியவருகிறது. ஓவியாவுக்கும் தனக்குமான சண்டையில், தன் செல்போனை தொலைத்துவிடுகிறார் பிரசன்னா. அது விமல் கைக்கு கிடைக்கிறது என்பது தான் சுவாரஸ்யம்! அதில் பிரசன்னா ஓவியாவுடன் இருந்ததையும் சேர்த்து பல சல்லாப வீடியோக்கள் இருப்பது மேலும் சுவாரஸ்யம்!
என்ன நடக்கப் போகிறது என ஆவலோடு இரண்டாம் பாதிக்கு காத்திருந்தால், பிரசன்னா விமலை துரத்த, விமல் அவருக்கு பரிட்சைகள் வைக்க என திரைக்கதை நகர்கிறது. என்ன நடக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள முடியாத வகையில் ஏதேதோ நடக்கிறது. இணையதளத்தில் பிரசன்னா – ஓவியாவின் சல்லாப வீடியோ வெளிவர, ஆட்டம் சூடுபிடிக்கிறது… முடிவு என்ன என்பது மீதிக் கதை.
மலையாளத்தில் இப்படம் பெரிய பாராட்டைப் பெற்றாலும், படத்தில் நமக்கு பல கேள்விகள் வந்துபோகிறது. கதைப்படி முதல் அயோக்கியன் பிரசன்னா தான். அவர் தான் பெண்களை வளைத்துப்போடுவதில் வல்லவராக இருக்கிறார். அப்படி இருக்க அவருக்கு எந்த தண்டனையும் வழங்காமல், ஆபாச வீடியோவை இணையதளத்தில் ஏற்றிய மொபைல் கடைக்காரரை பிரசன்னாவும் விமலும் சேர்ந்து அடித்ததில் என்ன நியாயம்? ஆபாசப் படத்தை எடுத்தவன் குற்றவாளியா? அதை இணையதளத்தில் அம்பலப்படுத்தியவன் குற்றவாளியா?
மொபைலைக் கொடுக்க பல முறை முயற்சித்தும் அதைக் கொடுக்க முடியாமல் போன காரணத்தை பிரசன்னாவிடம் விமல் சொல்லாதது ஏன்? பிசன்னாவின் பணக்கார திமிரை அடக்க நினைக்கிறார் விமல்! அப்படியென்றால் க்ளைமக்ஸ் காட்சியில் பிரசன்னா திருந்திவிட்டாரா என்ன? அந்த மொபைலுக்கு ஆசைப்படாத விமலுக்கு, பிரசன்னா அதே மொபைலை பரிசாக கொடுக்கும் போது, அதை வீசி எறிந்திருக்க வேண்டாமா? அப்படியென்றால், ஆபாச படம் பிடித்த பிரசன்னா நல்லவர், போனைத் திருப்பிக் கொடுக்க நினைத்த விமல் கெட்டவரா? தவறே செய்யாத விமலை பிரசன்னா ஏன் மன்னிக்கவேண்டும்? ஷ்ஷ்ஷ்ஷ்ஷபா… ஒன்றும் விளங்கவில்லை!
எது எப்படியோ, சூரியும் தம்பிராமைய்யாவும் கொஞ்சம் சிரிக்க வைப்பது ஆறுதல்! இனியா வந்து போகிறார். திறமையான நடிகையை இப்படி வீணடித்திருப்பது ஓவர்! சுவர்ணமால்யாவிடம் என்ன கோபமோ! அவர் மேல் கோபமாக இருக்கிறவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து மகிழலாம்.
நடிப்பை பொருத்தவரை பிரசன்னா, விமல், ஓவியா, அநன்யா என எல்லோருமே டீசண்டான பெர்ஃபர்மென்ஸ்! ரகுநந்தன் இசையில் நீலாங்கரையில்… பாடல் ரசிக்க வைக்கிறது.
இயக்குனரே! ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா! படத்தின் இரண்டாவது பாதியில் சொல்லவந்த விஷயங்களை சரியாக சொல்லாமல் பயங்கர ‘சொதப்பல்ஸ் ஆஃப் இந்தியா’ பண்ணியிருக்கிறார் இயக்குனர் மாரிமுத்து. ஆதனால் பலருக்கும் படம் புரியாமல் போயிருப்பதே உண்மை!
புலிவால் – புரியாத வால்!
நக்கீரன்