×

நிமிர்ந்து நில் இசை வெளியீடு!!

பிரம்மாண்ட இசைக் கச்சேரியை அலங்கரித்துள்ளது ஜெயம் ரவியின் 'நிமிர்ந்து நில்' திரைப்படம்
ஆதிபகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் 'நிமிர்ந்து நில்'. இதில் ரவிக்கு ஜோடியாக அமலா பால் மற்றும் கன்னட நடிகை ராகினி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சரத்குமார், சூரி, கோபிநாத், சுப்பு பஞ்சு, படவா கோபி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதன் இசை வெளியீடு இன்று சென்னையில் ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, நாணி, ஆர்யா, சூரி, விமல், நடிகைகள் அமலா பால், ராகினி, இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், ராஜேஷ், சுசீந்திரன், பாண்டிராஜ், சசிக்குமார், வெற்றிமாறன், விக்ரமன், சேரன், எஸ்.பி.ஜனநாதன், அமீர், தயாரிப்பாளர்கள் கே.எஸ்.ஸ்ரீநிவாசன், கேயார், ராஜன், பஞ்சு அருணாச்சலம், பிரமிட் நடராஜன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர் மோகன், நீயா நானா கோபிநாத் ஆகியோர்கள் கலந்து கொண்டு இசை தட்டை வெளியிட்டு விழாவை சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் பேசுகையில், ரவியின் அப்பா அவருக்கு இளம் புயல் என்று பட்டம் அளித்துள்ளார். ஆனால், இந்த படம் வந்த பிறகு ரவியை இளம் சூறாவளி என்றழைத்தால் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்று கூறினார்.
விழாவில் காண்பித்த படத்தின் 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இப்படம் தெலுங்கில் 'ஜன்டாபாய் கபிராஜு' எனும் பெயரில் உருவாகியுள்ளது. இதில் ரவிக்கு பதிலாக நாணி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.