×

திரை விமர்சனம்! – இரண்டாம் உலகம்

நடிகர் : ஆர்யா
நடிகை : அனுஷ்கா
இயக்குனர் : செல்வராகவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்
ஒளிப்பதிவு : ராம்ஜி

செல்வராகவன் தன் மனதில் இருந்த கற்பனை உலகங்களுக்கு வண்ணமயமாக வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறார்.

Irandam_Ulagam இப்போது நாம் வாழும் காதலும் மோதலும் மிக்க பூமி… அதற்கு இணையாக வான்வெளியில் உள்ள இன்னொரு கிரகம் (உலகம் அல்ல). அதில் மோதல் மட்டும்தான் உண்டு. காதல் கிடையாது. அதனால் பூக்களே பூப்பதில்லை. அந்த கிரகத்தின் கடவுளான ‘அம்மா’வுக்கு, தங்கள் மண்ணில் காதல் அரும்ப வேண்டும்.. பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு ஒரு மாவீரன் வேண்டும். அவனுக்கேற்ற ஒரு காதலி வேண்டும்.

பூலோகத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்கிறார்கள்… அவர்கள் காதல் முழுமையாக வெளிப்படும் ஒரு இரவில், அனுஷ்கா திடீரென மரிக்கிறார். அதற்கு இரு தினங்கள் முன்பே ஆர்யாவின் தந்தை இறக்கிறார். அவரது ஆன்மா அனுஷ்கா இறந்த இடத்தில் நிற்கும் ஆர்யா கண்முன் தோன்றி, ‘காதல் உண்மையானதென்றால்… உன் காதலியை நீ மீண்டும் பார்ப்பாய்’ என்கிறார். அதை நம்பி, ஊரெல்லாம் சுற்றுகிறார் ஆர்யா. ஒரு நாள், பேய் மழை.. பூமி அதிர்கிறது. கண்ணெதிரே ஒரு பழைய பியட் கார் உருண்டு செல்கிறது… அதில் ஏறி பயணிக்கிறார் ஆர்யா… அப்படியே அந்த இரண்டாவது கிரகத்துக்குப் போய் விடுகிறார்..!

இரண்டாம் உலகம் என்று ஒரு கிராபிக்ஸ் உலகத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று கிடையாது. அதில் வாழும் மக்கள் அனைவரும் பெண்களை மதிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்றும் அவர்களுக்கு எந்தவித மரியாதை தராமலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நவீன உலகத்தில் ஒரு பெண்ணை தெய்வமாக வழிப்படுகிறார்கள். அவருக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரியாதை. இங்கு அரசர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆணுக்கு பெண் அடிமை இல்லை என்று சுய கவுரவத்தோடு வாழும் பெண்ணாக அனுஷ்கா. துடிப்பான இளைஞரான ஆர்யா அங்கு அனுஷ்கா மீது காதல் கொள்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் அனுஷ்கா. இவர்களுக்குள் காதல் புரிய வைக்க, காதல் மலர, இயல்பான உலகத்தில் இருந்து அனுஷ்காவை பிரிந்து வாழும் ஆர்யாவை இரண்டாம் உலகத்திற்கு கொண்டு வருகிறார் பெண் கடவுள்.

நிஜ உலகத்தில் இருந்து இங்கு வரும் ஆர்யா, இரண்டாம் உலகத்தில் காதலே என்ன என்று அறியாத அனுஷ்காவிற்கு காதலை உணரவைத்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இரண்டாம் உலகத்தில் முதல் காதல் மலர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

இரண்டு கதாபாத்திரமாக நடித்திருக்கும் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் வந்திருந்தாலும் ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இருவரும் மிரள வைக்கிறார்கள். ஆர்யாவின் உடல் அமைப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு இல்லை.

காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அந்த உலகம் காதல் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லி, பின்பு அதில் காதலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். எங்கெல்லாம் காதல் இல்லாமல் இருக்கிறதோ அந்த உலகத்திற்கு எல்லாம் ஆர்யாவை அனுப்பி காதலை மலர வைப்பது என்று முடிவெடுத்திருப்பதுடன் படம் முடிகிறது.