×

ஜில்லா – விமர்சனம்!

ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த தாதாவை மோகன்லால்(சிவன்) போட்டுத்தள்ளுகிறார். தன் மனைவி பூர்ணிமா பாக்யராஜுன் பிரசவத்திற்காக ஹாஸ்பிடலுக்கு சென்று கொண்டிருக்கும் மோகன்லாலை, அந்த தாதாவின் மகன்களான ரௌடியும், போலிஸும் வழிமறிக்கிறார்கள். தன்னிடம் டிரைவராக இருக்கும் விஜய்யின் தந்தையை பலிகொடுத்துவிட்டு இளம் வயது விஜய்யின் உதவியுடன் மனைவியைக் காப்பாற்றி, தன்னை கொல்ல வந்த போலிஸையும் போட்டுத்தள்ளுகிறார் மோகன்லால்.
தன்னையும் மனைவியையும் காப்பாற்றிவிட்டு அனாதையாக நிற்கும் விஜய்யை அழைத்துச் செல்லும் மோகன்லால் தன்னுடைய மகனாகவே அவரை வளர்க்க, மோகன்லாலை எதிர்த்து பேசினாலே அடித்து துவைக்கும் ஜில்லா ரௌடியாக வளர்கிறார் விஜய்(சக்தி). அட்டூழியம் பண்ணும் ரௌடி கும்பலை அடித்து துவைத்து ‘தப்பு பண்ணக்கூடாதுனு சொல்லல… தப்பு பண்ணனும், ஆனா அத நாங்க மட்டும் தான் பண்ணனும்’ என்ற கொள்கையுடன் எதிர்க்கும் வில்லன்களையெல்லாம் போட்டுத்தள்ளும் ஆன்ட்டி-ஹீரோவாக விஜய் தூள் கிளப்ப, படத்துல யார் தான் பாஸ் வில்லன்? என்ற கேள்வி தோன்றுகிறது.
தன் தந்தையை கொன்றது ஒரு போலிஸ் என்பதால் சிறுவயதிலிருந்தே காக்கி கலர் பிடிக்காமல் வளரும் விஜய் தன் பால்ய நண்பன் சூரி கான்ஸ்டபிளாக காக்கி சட்டையுடன் வந்ததும் சட்டையை கிழிப்பது, பார்த்தவுடனே காதலில் விழுந்த காஜல் அகர்வாலும் போலிஸ் என்று தெரிந்ததும் காதலை கைவிடுவது என காக்கியை கண்ணால் கூட பார்க்காமல் இருக்கிறார்.
’சிவனுக்கு மேல எவனுமில்லடா’ என்று தனக்கு சொந்தமாக ஒரு மினிஸ்டரை(சம்பத் ராஜ்) வைத்துக்கொண்டு செல்வாக்குடன் மதுரையை ஆட்டிப்படைக்கும் மோகன்லாலை, மதுரை மாவட்ட கமிஷனராக பொறுப்பேற்கும் பிரதீப் ராவட்(கஜினி வில்லன்) கைது செய்து 5 மணி நேரம் தனது கஸ்டெடியில் வைத்து மோகன் லாலை அவமானப்படுத்துகிறார். இந்த அவமானம் தாங்காமல் மோகன்லால் கலங்கியதைக் கண்டு, கமிஷனரின் கையை விஜய் வெட்டினாலும், கமிஷனரின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணரும் மோகன்லால் ’நம்ம ஆள் ஒருத்தர் அந்த இடத்துல இருக்கனும். அதுக்கு சக்தி தான் சரியான ஆள்’ என்று சொல்லிவிடுகிறார்.
மோகன்லாலின் சந்தோஷத்திற்காக போலிஸாக சம்மதிக்கிறார் விஜய். போலிஸ் டிரைனிங்கிலும், தேர்விலும் விஜய் பல சொதப்பல்கள் செய்தாலும் மோகன்லால் தனது பலத்தால் அவரை அசிஸ்டண்ட் கமிஷனராக்கிவிட ‘இனி எந்த ரௌடியின் மீதும் ஆக்‌ஷன் எடுக்கக்கூடாது. ஏன்னா அவங்க எல்லாரும் என் மாமன் மச்சான்’ என்ற உத்தரவுடன் விஜய் சார்ஜ் எடுக்கிறார் .
மோகன்லாலின் மகனான மகத் ராகவேந்திரா ஷாப்பிங் மால் கட்ட கேஸ்(எரிவாயு) ஏஜென்ஸி இருக்குமிடைத்திற்கு ஆசைப்பட்டதும், மோகன்லாலின் ரௌடி கும்பலும், விஜய்யின் போலிஸ் கும்பலும் அந்த ஏஜென்ஸியை அடித்து நொறுக்கி பூட்டுபோடுகிறார்கள். ரௌடிகளின் களேபரத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த இடத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருக்கும் மக்களும், பள்ளிக்குழந்தைகளும் இறப்பதையும், அலறுவதையும் கண்கூடாக பார்க்கும் விஜய் கலங்கிப்போகிறார்.
(ஹீரோன்னா ஒரு கட்டத்துல திருந்தனுமில்லையா? அவரை திருத்த ஒருத்தர் வரனுமில்லையா?) வழக்கம்போல காஜல் அகர்வாலின் கடுமையான வார்த்தைகளால் திருந்தும் விஜய் முதல்முறையாக காக்கிசட்டையை போட்டு மாமன் மச்சான் ரௌடிகளையே சுலுக்கெடுத்து, ஒரே நாள் இரவில் ’ஆபரேஷன் க்ளீன்’ என்ற ஆபரேஷன் மூலம் மதுரை மாவட்டத்திலிருக்கும் மொத்த ரௌடிகளையும் கைது செய்துவிடுகிறார்.
’நம்ம ஆளுங்களை ஏன் அரஸ்ட் பண்ண? இந்த காக்கி சட்டையை கழட்டி போட்டுட்டு பழைய சக்தியா வா’ என்று சொல்லும் மோகன்லாலிடம், ’உங்க பக்கத்துல இருந்து பாத்தா தப்பா தெரியல, இங்க இருந்து பாத்தா தப்பா தெரியுது. நான் மாறமாட்டேன் நீங்க மாறனும்’ என்று சொல்லி மோகன் லாலை எதிர்த்து நிற்கிறார் விஜய்.
விஜய் தனது ஒவ்வொரு தொழிலையும் முடக்குவதோடு, தன் சொந்த மகனையும் கைது செய்ய, தன்னோடு இருக்கும் அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி விஜய்யை கொன்றுவிடுமாறு ஐடியா கொடுக்கிறார் மோகன் லால். விஜய்யை லாரி ஏற்றி கொல்லவந்தவனை பிடித்து அடித்து யார் காரணம் என்று விஜய் கேட்கும்போது மோகன்லால் பெயரை சொன்னாலும் நம்பாமல், உண்மையை கண்டுபிடிக்க துடிக்கிறார்.
மோகன்லாலுக்கு தெரியாமல் விஜய்யைக் கொல்ல சதி செய்தது யார்? மோகன்லால் திருந்தினாரா? என்பது தான் கிளைமாக்ஸ் அதிரடிகள்.
மற்ற நகரங்களுக்கு சென்று வாழ்ந்தாலும் மதுரை பேச்சுவழக்கு அவ்வளவு எளிதில் மாறாதது. ஆனால் மதுரையிலேயே பிறந்துவளரும் கேரக்டரில் நடித்துக்கொண்டு சாதாரணமாக விஜய் வசனம் பேசுவது ஒட்டவில்லை. விஜய் வரும் காட்சிகளிலெல்லாம் ஒரு சண்டையாவது கன்ஃபார்ம், ரௌடிகள் இல்லையென்றால் சூரியை மொத்துகிறார்.
ஒரு ஜில்லாவையே அடக்கி ஆளும் தாதாவாக, மகன் மகள்களுக்கு அப்பாவாக, இந்த கேரக்டருக்கு மிகச்சரியான தேர்வு இவர் தான் என்ற அளவிற்கு அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார் மோகன்லால். விஜய்யை எதிர்த்து பேசியவர்களை கூட வாயால் கிழித்துப்போட்ட ரசிகர்கள் விஜய்யை மோகன்லால் எட்டி உதைக்கும்போது உணர்ச்சிவசப்படாமல் இருந்தது அவரது சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு கொடுத்த மரியாதை.
படத்துல விஜய் ஹீரோவாக இருந்தாலும் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்வது மோகன்லால் தான். மோகன்லாலுக்கு சமமாக வசனம் பேசி நடிக்க அதிக சிரமப்பட்டிருக்கிறார் விஜய். அந்த சிரமத்தில் தானோ என்னவோ, மோகன்லாலுக்கு சிரமம் கொடுக்க மூச்சிரைக்க விஜய்யுடன் நடனமாடவிட்டிருக்கிறார்கள். மூச்சுவாங்கிக்கொண்டு விஜய்யுடன் சேர்ந்து மோகன்லால் குதிப்பதை பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கிறது. சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுனு படத்துல பாட்டு வந்தாலும், மோகன்லால் நடிப்புக்கு முன்னாடி விஜய்யோட நடிப்பு தூசுனு தான் நமக்கே சொல்லத் தோணுது.
வழக்கம்போல ஹீரோவை திருத்தவும், பாடல் வரப்போகிறது என்று உணர்த்தவும் சில ஃபிரேம்களில் எங்காவது இருக்கிறார் காஜல். கமிஷனர் விஜய்யை விட சப்-இன்ஸ்பெக்டர் காஜல் அதிக நேரம் காக்கி உடையில் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். தம்பி ராமையா, சூரி என இரண்டில் ஒருவர் விஜய்யுடன் எப்போதும் இருந்து அவ்வப்போது காமெடி கௌண்டர்களை அள்ளி வீசி சிரிப்பலையை பரவ விடுகிறார்கள்.
’பாட்டு ஒண்ணு கட்டு கட்டு தோதா’ பாடலில் விஜய்யுடன் மோகன்லால் ஆடுவதும், ஜீவா, ஜித்தன் ரமேஷ் திரையில் தோன்றுவதும் ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விருந்து. விஜய்-காஜலுக்கிடையேயான காதல் பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்தை தடுத்து நிறுத்துவது போல தோன்றினாலும் குத்துப்பாடல்கள் செம ஸ்டிராங். ’ஜிங்குனமணி ஜிங்குனமணி’ பாடலில் வரும் கவர்ச்சி நடிகையை அதிக ஆபாசங்கள் இல்லாமல் கிராஃபிக்ஸ் உதவியுடன் வண்ணமயப்படுத்தியிருப்பது நல்ல ஐடியா.
இயக்குனர் நேசன் பாராட்டப்படவேண்டிய இயக்குனர். பணமும் தொழில்நுட்பமும் இருக்கிறது என்பதற்காக அநாவசிய காட்சிகள் இல்லாமல் சில காட்சிகளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ் உதவியோடு படத்தை எடுத்திருக்கிறார்.
எல்லா படங்களையும் போல விஜய்யை தூக்கிப்பிடிக்கும் வசனங்கள் இந்த படத்திலும் ஏராளம். அவற்றில் சில…
மோகன்லால் – நான் நினைச்சா இவன் முடிப்பான். இவன் சாதா சக்தி இல்ல. ஜீவன் உள்ள சக்தி.
மோகன்லால் – இந்த சிவன் இல்லாம சக்தி இல்லை.
விஜய் – சக்தி இல்லாம எவனும் இல்லை.
திரைக்கதையின் ஓட்டம் லாஜிக் சொதப்பல்களை மறைத்துவிடுகிறது. இருந்தாலும் ஒரு டவுட்டு. ஸ்கூலுக்கே போகமாட்டேன்னு சொன்ன விஜய், குறுக்கு வழியில் போலிஸான பின் இந்தியில் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
கமெர்ஷியல் படத்துக்கான ஆக்‌ஷன், செண்டிமெண்ட், சிரிப்பு, காதல், பாட்டு என அனைத்தும் நிறைந்திருக்கிறது ஜில்லாவில். சட்டசபைன்னு தான் பேரு, சட்டையை உருவிட்டுத் தான் சபையையே ஆரம்பிக்குறாங்க என்ற வசனத்திலிருந்து, அந்நிய முதலீட்டிற்கு நம் மந்திரிகள் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள், மக்கள் எப்படி பாதிக்கிறார்கள் என்பது வரை லைட்டாக டச் பண்ணியிருக்கிறார்கள்.
நெஞ்சுல மூணு குண்டடி பட்டதுக்கப்புறமும் அப்பாவுக்கு ஃபோன் செய்து பேசுகிறார் மிகுந்த மனதைரியம்(!) கொண்ட மகத். போலிஸா சார்ஜ் எடுத்தாலும் யூனிஃபார்ம் போடமாட்டேன், ஸ்டைலா தாடி மீசையுடன் தான் அலைவேன் என விஜய் அடம்பிடிக்கும் கொடுமையெல்லாம் எத்தனையோ படத்துல அனுபவிச்சிட்டோம். இதுலயும் அனுபவிக்கவேண்டியது தான்.
வேகமாக செல்லவேண்டிய திரைக்கதையை ஸ்லோமோஷனில் காட்டுகிறேன் பேர்வழி என்று இழுத்து 3 மணி நேர முழுநீ….ள திரைப்படமாக காட்டியிருக்கிறார்கள். இதுவரை வெளிவந்த எந்த எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களில் இடம்பெறாத வகையில் செண்டிமெண்டான க்ளைமேக்ஸ் காட்சியில் நெஞ்ச நக்குறாங்கப்பா!
ஒருவன் செய்யும் தவறு அவனை மட்டுமல்லாமல் அவனை சுற்றியிருப்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. வன்முறை ஆபாசம் என எதுவும் அதிகமில்லாமல் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய கமெர்ஷியல் படமாக இருக்கிறது ஜில்லா. ஜில்லா படத்தை தயாரித்த நடிகர் ஜீவா நல்லா கல்லா கட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜில்லா – நல்லா கல்லா கட்டும்!