×

விஜய் பேருக்குதான் எனக்கு அண்ணன்! மத்தபடி ஒரு உதவியும் பண்ணதில்ல – பரபரப்பை ஏற்படுத்திய விக்ராந்த்


கற்க கசடற’ படத்தின் அறிமுகக் காட்சியில் விக்ராந்த் வடிவேலுவிடம் விஜய்யை பற்றி பெருமையாக வசனம் பேசுவார், அப்படிப்பட்ட விக்ராந்த் தான் இப்போது “இளையதளபதி என்றெல்லாம் எனக்கு யாரும் இல்லை” என்று விரக்தியில் பேசியிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு ரிலீசான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் விக்ராந்த். தமிழ்சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் தம்பி என்ற அடையாளத்தோடு அறிமுகமானார் விக்ராந்த்.

ஆனால் அதன் பிறகு நினைத்து நினைத்துப் பார்த்தேன், நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக என்று அரை டஜன் படங்களில் நடித்து கூட இன்றுவரை அவரால் ஒரு முன்னணி ஹீரோக்கள் லிஸ்ட்டில் சேர முடியவில்லை.

‘விஜய்’ என்கிற பிரம்மாண்டமான பின்புலம் இருந்தும், எந்த திரையுலக பின்னணியும் இல்லாமல் வந்து சினிமாவில் போராடும் ஒரு புதுமுக ஹீரோவுக்கான அத்தனை போராட்டங்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

தன் சொந்த மகனுக்காக பல படங்களை சொந்தமாக தயாரித்த விக்ராந்த்தின் சித்தப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விக்ராந்த்துக்காக ஒரு சொந்தப்படம் கூட தயாரித்ததில்லை. விஜய்யோ ஒருபடி மேலே போய் தான் நடிக்கின்ற எந்த பிரம்மாண்டப் படங்களிலும் விக்ராந்த்தை ஒரு ஹெஸ்ட் ரோலில் கூட நடிக்க வைத்ததில்லை.

இந்த நிலையில் தான் கிடைக்கின்ற வாய்ப்புகளை ஒதுக்கி விடாமல் அது சின்ன ரோலாக இருந்தாலும் அந்தப் படங்களில் நடித்து தன் இருப்பை பதிவு செய்து வருகிறார் விக்ராந்த்.

இந்நிலையில் நேற்றும் நடைபெற்ற ‘பாண்டியநாடு’ சக்சஸ் மீட்டில் பேசிய விஷால் “ இந்தப்படத்துல என் தம்பி விக்ராந்த்துக்கும் ஒரு கேரக்டர் குடுங்க என்று டைரக்டர் சுசீந்திரனிடம் நான் கேட்டேன். உடனே அவர் ஒப்புக்கு ஒரு கேரக்டரை கொடுக்காமல் நிஜமாகவே ஒரு நல்ல கேரக்டரை கொடுத்தார்.

இன்று விக்ராந்த் சீன்களை பார்த்து ரசிகர்கள் கை தட்டும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு என்றவர் விக்ராந்த்தை ஹீரோவாக வைத்து எனது சொந்தக் கம்பெனியில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறேன் என்றும் சொன்னார்.

விஷாலின் இந்தப் பதிலைக் கேட்டவுடன் ஒரு ரிப்போர்ட்டர் “இளைய தளபதி ( விஜய் ) வாங்கித் தர முடியாத ஒரு இடத்தை உங்களுக்கு புரட்சி தளபதி ( விஷால் ) வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க..,? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த விக்ராந்த், நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல.

நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு.

அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி’யெல்லாம் எனக்கு யாரும் கெடையாது. அதாவது அண்ணன் விஜய் எனக்கு எந்த உதவியும் செய்யல, அதனால் எனக்கு விஜய்யெல்லாம் அண்ணனே கெடையாது என்று பொருள் வரும்படி விரக்தியில் விளாசித் தள்ளினார் விக்ராந்த்.

இதற்கும் விக்ராந்த் விஜய்க்கு தூரத்து சொந்தமெல்லாம் கிடையாது. விஜய்யின் அம்மா ஷோபாவின் தங்கையான ஷீலாவின் மகன் தான் விக்ராந்த்.